Tuesday 10 December 2013

கண்ணுக்குக் கண்ணாக - சிறுகதை


இயற்கையின் அழகைக் கெடுப்பது போல, விண்ணில் தெறித்த மின்னல் அங்குள்ள நட்சத்திரங்களைப் பயமுறுத்தியது. அன்னையின் சேலையில் ஒளிந்து கொண்ட பிள்ளைகளாய் மேகத்தின் போர்வையினுள் அந்த நட்சத்திரங்கள் மறைந்து கொண்டன. இடியின் சத்தத்தைக் கேட்டு மிரண்டு போனவன் என் கற்பப் பையை ரவி மெல்ல உதைத்தான். அந்த அடை மழையிலும் அவனின் முனவல்கள் என் செவிகளுக்கு எட்டின. பயங்கரமான பேய் மழையின் இரவில், தனியாக வசிக்கும் எனக்கு ரவியின் அசைவுகளும், உதிரத்துடன் கலந்த இன்ப உணர்வும் உறுதுணையாக இருந்தது. ஆனால், இந்த இடியோசை அவனை எந்த விதத்திலும் தாக்காத படி, என் உள்ளுணர்வை அவனுக்குத் தாலாட்டாகக் கொண்டு, என் உதிரத்தையே போர்வையாக அவன் மீது அணைத்துக்கொண்டேன்.
_____________________________________________________________________________________
பருவங்கள் மாறின
அம்மா! உனக்கு எத்தன தடவ சொன்னாலும் புரியாதா? உங்கள பார்க்கவே வெறுப்பாக இருக்கு. அதவிட இந்த ஒத்தக் கண்ணு, இன்னும் அறுவறுப்பா இருக்கு. படிச்சுப் படிச்சு சொன்னேனே! ஸ்கூலுக்கு வராதீங்க, ஆசிரியர வந்து பார்க்காதீங்கனு! எவ்வளவு தடவ சொன்னாலும் உங்க மண்டையில ஏறாதா? கண்ணாடிய எடுத்துத்தட்டுதான் என்னோட மார்க்ஸ்ஸ பார்க்கனும்மா? வீட்டுல நான்வந்து கொடுக்க மாட்டேனா? தலை எழுத்து, கை எழுத்த நீங்க தானேபோடனும், அப்ப பார்க்கலாம்ல. உயிர வாங்கறத்துக்குனே வந்திருக்கீங்க. தலையெழுத்து! இந்தக் கொடுமைய நான் பார்க்கறத்துக்குப் பதிலா என்ன பெக்காம இருந்திருக்கலாம்.
அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டியாகப் பாய்ந்தாலும் அவன் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது என்ற ஒரே நோக்கிலே, எனக்குள் இருந்த கோபதாபங்களை அடக்கிக்கொண்டேன். என்  அனைத்து உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு என் தனிமையை நாடிச் சென்றேன். வெளியில் காட்ட முடியாத குமுறல்களை வாயில்லாத குழந்தையைப் போல் என்னுள்ளே அழுதுகொண்டிருந்தேன். 
ஆம், நான் ஒற்றைக் கண் படைத்தவள்தான். அழகில்லாதவள்தான். ஆனால் போன ஒற்றைக் கண்ணின் கதையை நான் அவனிடம் எப்படிச் சொல்வேன். என் கண்ணை மூடி, அவன் கண்ணைத் திறந்து வைத்தேன். என் அழகை அழித்து அவனுக்கு அழகூட்டினேன். சமுதாயம் முன் நான் அவலமாக நின்றேன். என்ன இருந்தாலும் எல்லாம் என் மகனுக்குத் தானே. அவனுக்காக என் உடல் தசை, நரம்பு, உருபு என்று எதை அழித்துக் கொள்ளவும் தயங்கமாட்டேன்.  என்னை ஏளனப் பார்வையோடு பார்க்கும் சமுதாயத்தை எதிர்க்க என் மகன் ஒருத்தனே போதும். அவனின் பலத்தை நம்பியே நப்பாசையுடன் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவனும் என்னைத் துட்சமாக நினைத்துவிட்டானே! ஐய்யோ! என் சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டது.
காலங்கள் உருண்டோட அவனும் என்னை விட்டு தூரம் செல்வதை உணர்ந்தேன். இரவில் ரவி கண்ணுறங்கும் போது மட்டும், அவனை கதவோரத்திலிருந்து பார்த்து ரசித்தேன். அவன் கேசத்தைக் கோத என் இரு கரங்களும் கெஞ்சின. என் மார்பில் கட்டியணைத்த தங்கத்தைத் தாலாட்டுப் பாடி கண்ணுறங்க வைத்த நினைவுகள் என் மேனி முழுவதையும் இன்பத்தில் வருடியது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தும் எங்கே, நான் ஏதாவது செய்து, அவன் விழித்துக் கொண்டு துன்புறுவானோ என்று அன்பைப் பொழிய முடியாதவளாய் நிற்கதியற்று நின்றேன். ஆயினும், இந்தப் பாவி மனத்திற்கு அவனை ஒரு போதும் வெறுக்கத் தெரியவில்லை. என் கனவு, லட்சியம், பலம் அனைத்தும் ரவிதான் என அவன் மகிழ்ச்சியாக இருப்பதையே நான் தூரத்திலிருந்து விரும்பி வாழ்த்தினேன். என்னை அம்மா என்று மீண்டும் ரவி அழைத்து என்னிடம் ஓடி வந்து கட்டியணைக்கும் நாளை கற்பனை செய்த என் விழி ஏக்கத்தில் காத்துக்கொண்டிருந்தது.
என் எண்ணங்களை யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்த நாட்கள் அவை. என் மனவலைகளைக் கொட்டித் தீர்க்க எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய டைரீ எழுதும் பழக்கமே.  
_____________________________________________________________________________________
ஜனவரி - 24 – 1999
அன்று ரவியின் பிறந்தநாள். ஒரு கையில் கேக்கும் மறு கையில் பரிசுமாக ரவியின் வருகைக்காக வீட்டில் ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தேன். இரவு மணி பத்தாகியும் அவன் வீடு திரும்பவில்லை. பதற்றத்தில் அக்கம் பக்கம், பள்ளி ஆசிரியர் என தெரிந்தவர்களிடம் கேட்டேன். ஆனால் ஒரு செய்தியும் அறிய முடியவில்லை.
அவன் நண்பர்களிடம் அவனைப் பற்றி விசாரிக்கவும் முடியாமல் துடியாய்த் துடித்தேன். நள்ளிரவு பன்னிரண்டு, முதல்முதலாக, அந்தச் சுவருகள் என் கதரல்களை ஆழமாகக் கேட்டிருக்கும். கண்களில் தூக்கம் இல்லாமல், அவன் வருகையை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தேன்.
வடித்தக் கண்ணீரின் ஈரப்பசை கன்னத்தில் காயும் முன்னமே, ரவி வரும் சத்தம் கேட்டது. அவனைக் கண்டவுடன், என் உடலை விட்டு என் உள்ளம் அவனைக் கட்டியணைத்துக்கொண்டது. தலை முதல் கால் வரை அவன் நலமாகத்தான் இருக்கிறானா என்பதை அந்த ஒற்றைக் கண் அலசியது. உள்ளத்தின் ஆத்மாவிலும் ஒற்றைக் கண் என்னை விடவில்லை.
மெல்லிய குரலில், ஏன் தாமதம்?’ என்று கேட்டேன். நீ கொஞ்சம் பேசாம இருக்கியா! நானும் பெரியவனா ஆய்டேன். நான் எங்க போறேன், எப்படி இருக்கேன்னு பார்க்க வேணாம். இனிமேல அப்படித்தான்! ஆனா, நீ ஒரு விஷயத்துல மட்டும் கவலையே பட வேண்டா. நல்லாபடிச்சு நல்ல வழில போய் எவ்வளவு சீக்கிரம் உன்ன விட்டு போ முடியுமோ, அப்பதான் எனக்கு நிம்மதி. இன்னிக்காவது என்னை சும்மா விட்டுடு. கேள்வி கேட்டு எரிச்சலாக்காதே! என்று கத்திவிட்டுச் சென்றான்.
மீண்டும் மீண்டும் துன்படுத்தப் பட்ட மனம், மேலும் வாடி, குமுறியது. பிள்ளை மனம் கல்லாக இருந்தாலும் பெற்ற மனம் பித்தாச்சே. ரவியின் வருகையே எனக்குத் திருப்தி என அவன் கண்ணுறங்கும் வேளையில் பரிசை அவன் மேசையில் வைத்தேன்.

_____________________________________________________________________________________
டிசெம்பர் – 31 – 2001
     புத்தாண்டை வரவேற்கும் பரபரப்பில் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். சமையலறையில் ஒரு கடிதத்தைக் கண்டென். அதைப் பிரித்துப் படித்துப் பார்த்ததில் என் இதயத்தைத் திருடும் எமனின் கயிரு போன்றே இருந்தது. என் கண்ணன், இனிமேல் என்னைக் காண வரமாட்டான் என்றும் தேட வேண்டாம் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் நிம்மதி என்ற கையெழுத்தும் சேர்க்கப்பட்டது.
_____________________________________________________________________________________
அன்றிலிருந்து பல ஆண்டுகள் காத்திருந்தேன். என்னிடம் என் கண்ணன் ரவி வந்துவிடுவான் என்று மணல் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு இருட்டறையில் காத்திருந்தேன்.
வயதாகிவிட்டது என்பதனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். அருகில் உள்ள கோபீத்தியாமில் பாத்திரம் தேய்ப்பவளாகச் சேர்ந்தேன். கிடைத்த அறுநூறு வெள்ளியைக் கொண்டு அதே வீட்டில் நிம்மதியற்று வாழ்ந்தேன்.
_____________________________________________________________________________________
ஜூலை - 10 – 2011
பாத்திரங்களைத் தேய்த்து தேய்த்து காய்ந்து போன கைகளுக்கு ஓய்வு தருவதற்காக அருகில் உள்ள நாற்கலியில் அமர்ந்துகொண்டேன். ஏனோ அன்று என் மனம் ரவியைப் பற்றிய ஏக்கத்திலேயே தவித்துக்கொண்டிருந்தது. என் அருகில் அவன் இருப்பது போன்ற உணர்வு என்னுள் ஊடுரிவிக்கொண்டிருந்தது. திரும்பிப்பார்த்தேன். என் ரவியின் கண்களைப் பார்த்தேன். பல பேருடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். நல்ல ஆடை உடுத்தி, பெரிய ஆளின் தோரணையில் இருந்ததைப் பார்த்து கண் குளிர்ந்தேன்.
வேலையை விட்டு விட்டு அன்று நாள் முழுவதும் அவன் பின் தொடர்ந்தேன். அவன் சாங்கி விமான நிலையத்தில் ஒரு பெரிய பதவியில் இருப்பதை அங்குள்ளவர்கள் சிலர் கூறினர். அவன் வீடு செங்காங்கில் இருப்பதையும் கண்டேன். அன்றிரவு அந்தப் பேட்டையின் அடியில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மீண்டும் கனவுக் கோட்டைகளைக் கட்டத் தொடங்கினேன். மணி இரவு எட்டு இருக்கும். ரவி, அவன் மனைவி, ஒரு நான்கு வயது பையன் என மூவரும் வெளியே சாப்பிடச் சென்றனர்.
அழகான மனைவி, ரவியின் சாயலில் நான்கு வயது பையன் என அழகான குடும்பத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து போனேன். அவர்களை மெல்ல பின் தொடர்ந்து, தூரத்திலிருந்து ரசித்தேன். அவ்வழியே சென்ற ஒரு முதியவர் தடுக்கி விழுந்தார். அவரைத் தூக்கிக் கைக்கொடுத்த ரவியைக் கண்டு பூரிப்படைந்தேன். என்னை ஏற்றுக்கொள்வானோ என்ற விபரீத ஆசையில் அவர்கள் முன் நின்றேன். அப்பொழுது, ரவியின் மகன், அம்மாவிடம் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டான். அம்மா! பயமா இருக்கு .. பயமா... கண்ணு.. இல்ல என்று கூறிய வார்த்தைகள் என் முகத்தைக் கண்டந்துண்டமாகக் கழித்தது போன்ற உணர்வு. ரவி.. என்று கூறுவதற்கு முன்னால், அவன் அவ்விடத்தைவிட்டு ஓடிவிட்டான். ஆனால், அவன் கண்களில் இருந்த வெறுப்பை நான் கண்டேன். தலை குனிந்தபடியே நொந்து வீட்டிற்குச் சென்றேன்.
_____________________________________________________________________________________
என் விதியை நினைத்தபடியே மீண்டும் என் வீட்டின் நான்கு சுவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுநாள் தபால் பெட்டியில் ஒரு வரவேற்பு கடிதத்தைக் கண்டேன். ரவி படித்த பள்ளியில் நூறாண்டு விழா நடைபெறவுள்ளது என்றது அந்தக் கடிதம். அதை அவன் தற்போது வசிக்கும் முகவரிக்கு அனுப்ப தபால் நிலையத்திற்குச் சென்றேன். அங்கே ரவியின் மனைவி வேலை செய்வதைக் கண்டேன்.
அன்று நடக்கவிருப்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிலையத்தில் உள்ள விளக்கை சரி செய்துகொண்டிருந்தவன் ஒருவன் ஏணியில் ஏறி பிடித்துக்கொண்டிருந்த கண்ணாடியைப் பட்டென்று கீழே போட விருந்தான். அது விழுந்து சிதறியது. அந்தக் கண்ணாடிச் சில்கள் அவளின் கண்ணில் குத்தாமல் இருக்க அவளை மறைத்து முன் நின்றேன். விளக்கின் கண்ணாடி என் மண்டையில் விழுந்தது. என் உணர்வுகள் என்னைவிட்டு மெல்ல பிறிந்து கொண்டே சென்றது.  
_____________________________________________________________________________________
அங்குள்ளவர்கள் தாக்கப்பட்ட முதியவரை அருகிலுள்ள தான் தொக் செங் அவசரப் பிரிவில் சேர்த்தனர். அவருக்குத் துணையாக ரவியின் மனைவி ஜெஸியின் குரல் மட்டுமே அப்பிரேஷன் அறை வரை அவரை தொடர்ந்தது.


_____________________________________________________________________________________
ஜெஸி! என ரவி பதற்றத்துடன் மனைவியைப் பார்க்க ஓடி வந்தான்.
அவள் ரவியின் கண்களை ஊற்றுப் பார்த்து நடந்தவற்றைக் கூறினாள். சிகிச்சையை முடித்த டாக்டர் அப்பொழுதுதான் அறையைவிட்டு வெளியேறி ஜெஸியின் பெயரை அழைத்தார்.  
நீங்கள் அழைத்து வந்த பேஷண்டின் நாடித் துடிப்பு மெதுவடைந்து கொண்டே வருகிறது. அவரின் உறவினர்களைக் கண்டுபிடித்து சொல்லவேண்டும். நீங்கள் வேண்டுமென்றால் அவரை உள்ளே போய் பார்க்கலாம், என்று கூறிவிட்டுச் சென்றார். 
தன் மனைவிக்காக ஒருத்தர் தன் உயிரைப் பணையம் வைத்ததை ரவியினால் நம்ப இயலவில்லை. சுயநலமாக இருக்கும் இக்காலக்கட்டத்தில், இப்படிப்பட்ட மனித நேயமா? என்று அவனுக்குள் ஒரு வியப்பு எழும்பியது. தன் பாதி உயிரைக் காப்பாற்றியத் தெய்வத்தைக் காண, துடித்தவன் கதவைத் திறந்தான்.
பார்த்தான், திகைப்படைந்தான். நா வறண்டு போனது. கண்களில் ஒரு துளி கண்ணீர் பூமியை விழும் முன் அவள் உயிர் பிறிந்தது.
___________________________________________________________________________________

அவனுக்குள் அவள் வாழ்கிறாள் என்ற கண்களின் ரகசியம் ஒருநாள் கண்டுகொள்ளும்....

No comments:

Post a Comment