Sunday 15 September 2013

பாரதியார் - பாரதிதாசன் விழா 2013


 
பாரதியார் - பாரதிதாசன் விழா

நேற்று மாலை 6 மணியளவில் இவ்விழாவைத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நடத்தியது. இதற்குத் தலைவராக திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள், சிறப்பு விருந்தினராகத் திரு இரா தினகரன் அவர்கள், நியமன நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் சிறப்புரை வழங்க திரு சி பாண்டித்துரை அவர்கள் ஆகியோர் சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்புரை வழங்கிய திரு சி பாண்டித்துரையே என் மனக்கண்ணில் நிற்கிறார். இவர் மலேசியத் தொலைக்க்காட்சிப் புகழ், உலகலாவிய தமிழ் இலக்கியப் பேச்சாளர் மற்றும் வழக்கறிஞர் என பல துறைகளில் சகலகலா வல்லவராக இருக்கிறார். ஆனால் சற்று உற்றுப் பாருங்கள். இவர் பணி முழுவதும் பேச்சை சுற்றியே இருக்கிறது. இவர் சொற்றிறன் பெற்றவர். இவரின் நாவில் தமிழ் அமிழ்தமாக பொழிய பல லீலைகளை நிகழ்த்திக் கொண்டே நம் செவிகளுக்கு இன்சுவை விருந்தாக இருந்தது.

தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே என்பதற்கு இணங்க பாரதியார் – பாரதிதாசன் இருவரும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் ஆற்றிய பங்கை நன்கு எடுத்துரைத்தார்.

பாரதி ஒரு சாதாரண கவிஞரா? மகாகவியா? என்று நம்முள் கேள்வி எழுப்பி ஒரே பாட்டில் அவரின் பெருமையை நம் மண்ணில் பரப்பினார் சிறப்புப் பேச்சாளர்.

‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’

சிந்து எங்குள்ளது? வடக்கில் சரி


‘சேரநன்னாட்டிளம் பெண்களுடனே’

வடப்பகுதியிலிருந்து அப்படியே கீழ் புறம் நோக்கி தென்நாட்டான சேரன் ஆண்ட பூமியை எடுத்துரைத்து, பின்பு


‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று

ஆந்திர தேசத்தில் உள்ளவர்களின் நலனில் அக்கறைக் கண்டார். இந்தியாவில் உள்ள அனைத்தவரையும் ஜாதி மதம் ஏதும் பாராமல் வாழ்ந்தவர் மகாகவி பாரதி.

 

 

‘கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்’

என்றும் ஒவ்வொரு நிலங்களின் பெருமைகளைப் பாடியவாரே அடுத்த வரிகளையும் சேர்த்துக் கொள்கிறார்.

‘சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்’

தன் நாட்டு நீரை தனக்கென்று பயன்படுத்த விரும்பாமல் ஏனைய நாடுகளுக்கும் போய் சேர வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டதாலும் அவர் மகாகவி பாரதியார் ஆவார்.

இவர் மண்ணுக்கும், பெண்ணுக்கும் மற்றும் ஜாதி கொடுமைகளுக்கும் விடுதலை பெற்றுத் தருவதற்குக் கடுமையாகப் புரட்சி கொண்டார்.

ஜாதி இல்லையடி பாப்பா என்ற பாடல் கூட மறை முகமாக பெரிய பாப்பாக்களுக்குத்தான் எடுத்துரைத்துள்ளார் என்ற உண்மையைத் தயங்காமல் பேசினார் சிறப்புரையாற்றியவர்.

இவர் பேச்சில் நான் கண்ட பல தகவல் துளிகளிலிருந்து ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

துரைசாமி, துரைசாமி என்று மலேசியாவில் வாழும் தோட்டத்துக்காரர்களுக்கு குலசாமியாகத் துரைசாமி என்ற ஒரு வெள்ளை சிலை உள்ளது. அது உண்மையிலேயே வெள்ளைக்காரரைக் கும்பிடும் சிலையாகவே இருந்துவந்தது. அந்த அளவுக்கு அடிமைத்தனம் குடியிருந்தது.

இப்படியே வாழ்வின் உண்மை ரகசியங்களை நகைச்சுவையுடன் போட்டுடைக்கவே, அரங்கத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து சிரித்தோம். இவர் பேச்சைக் கேட்க நான் மீண்டும் விரும்புகிறேன். அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.

இந்த நிகழ்வைச் சிறப்பாக வழிநடத்திச் சென்ற ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி.

 


 

Saturday 14 September 2013

எழுத்து


தமிழ் எழுத்துகளில் வளைவுகளும் சுழிவுகளும் மிகுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன? நம்முடைய முன்னோர்கள் பலகையிலும் காகிதத்திலும் எழுதவில்லை. பனை ஓலையில் இரும்பு எழுத்தாணிகொண்டு எழுதினார்கள். அதில் எழுதும்போது, ஓலை கிழியாமல் இருக்கவேண்டுமானால், இப்படி வளைவுகளும் சுழிவுகளும் இருந்தால்தான் எழுத முடியும்.


திருவள்ளுவர் எழுதிய முறை வேறு. நம் எழுத்துகளைப் பார்த்துவிட்டு, இவை வேறு மொழியைச் சார்ந்தவை என்று கூட எண்ணலாம். மரம் என்பதை ப்ரப் என்று நாம் படிப்போம்.

ம என்ற எழுத்தைப் போலவே, பல எழுத்துகள் உருவம் மாறியுள்ளன. தொல்காப்பியம் என்ற பழைய இலக்கண நூலில் எ ஒ என்ற இரண்டு எழுத்துகளுக்கும் புள்ளி உண்டு என்று சொல்லியிருக்கிறார். புள்ளி இல்லாவிட்டால் அவற்றை ஏ ஓ என்று பழங்காலத்தில் படிப்பர். எழு என்று எழுதுவதை அந்தக் காலத்தில் ஏழு எனெற் படித்தார்கள். இது போன்ற மாற்றங்கள் யாரால் உருவாக்கப்பட்டது ?

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே பெஸ்கி என்ற பாதிரியார் ஒருவர் இத்தாலி தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தார். அவர் தமிழ் கற்றுக் கொண்டார். வீரமா முனிவர் என்று தமிழ்ப் பெயரும் வைத்துக் கொண்டார். அவர் செய்த மாறுதல்தான் இன்று நாம் காணும் எ ஏ ஒ ஓ எழுத்துகள்.

Thursday 5 September 2013

அடையாளம்

அடையாளம் - முனைவர் சீதா லட்சுமி

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதாவது காலக்கட்டத்தில் தேடுவது அவர்களது தத்தம் அடையாளங்களைத்தான்.

இன்று நான் படித்த முகநூல் கட்டுரை இந்த அடையாளத்தைப் பற்றியே தலைப்பாகக் கொண்டிருந்தது. எழுத்தாளர் முனைவர் சீதா லட்சுமி அவர்கள். அதனாலன்றோ அவரின் அடையாளம் மொழி சார்ந்தே எழுதப்பட்டிருந்தது.

அடையாளம் என்ற சொல்லில் பல அர்த்தங்களை நாம் காணலாம். இவர்களின் எழுத்தைப் படிக்கும் போது, திரு கண்ணப்பிரான் அவர்கள் எழுதிய நாடோடிகள் என்ற சிறுகதைதான் என் நினைவிற்கு வந்தது. மொழி, பண்பாட்டுச் சிதைவு ஏற்பட்டு மனிதர்கள் தத்தம் அடையாளங்களை இழந்து தேடலில் அலைவதே இன்று வளர்ந்து வரும் அவல நிலை.

பல குடும்பங்களில் இன்று தமிழைவிட ஆங்கில பேச்சே மதிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் நம் மொழி, தமிழன் என்பதே நம் அடையாளம் என்பதை வலியுறுத்தி இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் முனைவர் சீதா அவர்கள்.

நம் சிங்கையில் நாம் கட்டாயமாக பள்ளிகளில் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதால், இந்த மொழி, கலாச்சார சிதைவு விரைவில் நிகழக் கூடிய நிலைக்குத் தள்ளப்படப் போவதில்லை. அதற்குள் உலகம் முழுவதும் தமிழ்த் தாயே நவீனமயமாகக் காட்சியளித்திடுவாள்.

அதற்காக எப்பொழுதும் தமிழை எளிமைப்படுத்துவதும் சிறப்பான செயல் அல்ல. மொழியைக் காப்பாற்றுவதன் கடமை நம் கைகளிலே உள்ளது. இது நம் மொழி என்ற அந்த உணர்ச்சிகரமான எழுத்தை இதில் காணலாம்.

இவர் கூறிய இரண்டு செய்திகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. ஒன்று குழந்தைகள் தங்களது மழலைப் பேச்சில் பெற்றவர்களை அம்மா அப்பா என்று அழைப்பது. பிள்ளைகள் வாய் திறந்து தமிழ் பேசவில்லை என்பதால் அதற்குப் புரியவில்லை என்று தவறாக எண்ணுவதே ஆகும்.

தன் அடையாளத்தை குழந்தைகள் கண்டுபிடித்துப் புரிந்துகொள்வதே ஓர் இனிமையான அனுபவமாகும். தான் கொண்டாடும் பண்டிகைகள், அதன் காரணங்கள், பாட்டிக் கதைகள் என புது புது செய்திகளை உள்வாங்கிக் கொள்ள முடியும். அக்குழந்தையின் சிந்தனைத் திறனையும் மேலும் இவை வளமூட்டும் என நல்ல கருத்துகளை வெளிக்கொணர்ந்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி.

ஐஸ்வர்யா